* மகிழ்ச்சியில் கிராம மக்கள்
சாயல்குடி: சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் லாபகரமாக இயங்கி வருவதால், நவீனமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இப்பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் அமைந்துள்ள வாலிநோக்கம், மாரியூர், கீழமுந்தல் உள்ளிட்ட தொடர்ச்சியான கடற்கரை கிராமங்கள், சிக்கல், கீழக்கிடாரம், தனிச்சியம், சேனாங்குறிச்சி,கொத்தங்குளம், மேலக்கிடாரம், கிருஷ்ணாபுரம், ஓடைக்குளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இஙகு மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில்கள், குறைந்தளவில் விவசாயம், பனைமரம் தொழில் நடந்து வருகிறது.
முழுவதும் கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இப்பகுதி கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக வாலிநோக்கத்தில் மாரியூர்,வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் முன்னாள் முதல்வர் கலைஞரால் 1974ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக 1986ல் வாலிநோக்கத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றும் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் நிதி பற்றாக்குறையால் இத்திட்டம் நிறைவடையும் தருவாயில் கைவிடப்பட்டது. இதனால் முழுக்க, முழுக்க அரசு உப்பு நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்காக அரசுக்கு சொந்தமான 5,236 ஏக்கரில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு மற்றும் உப்பு சுத்திகரிப்பு, உப்பு தயாரிப்பு பணிகள் இயற்கை முறையில் அயோடின் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் இன்றைய அளவில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,400 ஒப்பந்த பணியாளர்களும், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்திற்கு ஐ.ஏ.எஸ் நிலையிலான தனி இயக்குனர் மேற்பார்வையின் கீழ் இந்த நிறுவனம் லாபகரமாக இயங்கி வருகிறது. உப்பளம் அமைக்க நிலத்தை சீர்படுத்துதல், பாத்தி கட்டுதல், கடல்நீரை பாய்ச்சுதல். உப்பை விளைவித்து, பிரித்தெடுத்து அவற்றை சேகரித்து சேமித்தல். விளைவித்த உப்பை சுத்திகரித்து தரம் பிரித்தல், பாக்கெட் போட்டு, வெளிச்சந்தைக்கு அனுப்பும் வரையிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் இயற்கையான அயோடின் கலந்த கல் உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு தமிழக அரசின் பயன்பாட்டிற்கு போக, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழக அரசிற்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது. இங்குள்ள உப்பிற்கு வெளிமார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், உப்பின் உற்பத்தி தேவையும் அதிகமாகி கொண்டே செல்கிறது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்த \”நெய்தல் உப்பு\” என்ற வணிக ரீதியான உப்பு வெளிச்சந்தையில் நல்ல முறையில் விற்று அரசிற்கு வருவாய் ஈட்டி தருகிறது. இத்திட்டத்தில் கடந்த மாதம் வரை சுமார் 30 டன் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு, இருவித செறிவூட்டப்பட்ட உப்பினை பொது விநியோகம் திட்டம், சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்(அங்கன்வாடி) ஆகியவற்றிற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. லாபகரமாக இயங்கி வருவதால் அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள உப்பள இடத்துடன் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கூடுதலாக வாங்க கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கூடுதலாக ஆயிரம் ஏக்கரில் உப்பளம் அமைத்து, தற்போது நடைமுறையில் உள்ள இயந்திரங்களுடன் கூடுதலாக நவீன வசதிகளுடன் கூடிய இயந்திரங்களை கொண்டு உப்பு தயாரித்தல், இன்றைய வர்த்தக சந்தைக்கேற்றவாறு நவீனப்படுத்தி சந்தை படுத்துதல் போன்றவை விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்பணிகள் நிறைவுற்று பயன்பாட்டிற்கு வந்தவுடன் இப்பகுதியினர் 3 ஆயிரம் பேருக்கு நேரடியாவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் பச்சமால் கூறும்போது, ‘அரசு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 1200 ஏக்கர் நிலம் காலியாக கிடக்கிறது. அதனையும் உப்பள பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விரிவு படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்களை பணி நிரந்தரமாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 250 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. அவை ேசதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே கூடுதல் எண்ணிக்கையில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும், இந்த நிறுவனம் வளர்ச்சிக்காக அரசு வளர் நிறுவனமாக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்’என்றார்.