₹3 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணி விரைவில் துவங்கும்

*ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தகவல்

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகள், ₹3 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நோய் தீர்க்கும் மையமாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை திகழ்ந்தது. மகப்பேறுக்கு என சிறப்பு மருத்துவர்கள் உள்ளதால் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு தூரத்தை கருத்தில் கொள்ளாமல் கர்ப்பிணிகள் பலரும் மகப்பேறு சிகிச்சைக்காக விரும்பி வந்து சென்றனர்.

காலப்போக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி ஓய்வுக்கு பின்னர் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை மேம்படுத்தாததாலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. மழை காலங்களில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவ பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வசதி வாய்ப்புள்ளோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில், ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி உள்ளதால் தங்களது ஒரு நாள் வருமானத்தை இழந்து நீண்ட நேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே காத்திருக்கும் அவலம் நீடித்து வருகிறது. வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதிய மருத்துவ பணியாளர்கள் பணியில் இல்லாத நிலையினாலும் குறைந்த அளவிலான படுக்கை வசதியினாலும் விபத்து உள்பட அவசர சிகிச்சைக்காக வரும் பொதுமக்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனர். மகப்பேறு சிகிச்சைக்கு கூட நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுவதால் கிராமப்புற மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அருகிலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தனி ஆம்புலன்ஸ் வசதி வேண்டும். ரத்த வங்கி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளர்ச்சி குழு அமைத்து பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, முதற்கட்டமாக தனது சொந்த நிதியில் வெளிநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் பணியாளர் ஒருவரை பணியமர்த்தினார். மேலும் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து கோரிக்கை விடுத்து பேசினார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முதலமைச்சர் திட்டத்தின் கீழ் எனது தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 பணிகளில்  முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை பணியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

அதில், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால் மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உடனடியாக பணியமர்த்தி மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டும். டயாலிசிஸ் சென்டர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அமைப்பதுடன் கூடுதல் வசதிகளுடன் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான பணிகள் அரசு அனுமதியுடன் விரைவில் துவங்கும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தபடி பொதுமக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள முதன்மையான குறைகளை முதலமைச்சர் திட்டத்தில் தெரிவிக்கும்போது எவ்வித பாகுபாடும் இன்றி குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கை தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் முதன்மை கோரிக்கையான ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான அரசு அனுமதி விரைவில் கிடைக்க உள்ளது. முதற்கட்டமாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கம் பணி முடிவடையும் போது சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

Related Stories: