முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்கட்டில் பெண்ணை அடித்துக்கொன்ற பகுதியில் மீண்டும் புலி நடமாட்டம்

*கிராம மக்கள் பீதி

கூடலூர் :  முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்கட்டில் பெண்ணை தாக்கி கொன்ற பகுதியில் மீண்டும் புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

 முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைப்பாடி பகுதியில் கடந்த மாதம் 31 ஆம் தேதி மாரி என்ற பெண்ணை புலி அடித்துக்கொன்று உடலில் சில பாகங்களை தின்றது. இந்நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என இருவேளையில் புலி நடமாட்டத்தை பார்த்த இந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

புலி தாக்கிய சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வனத்துறையினர் 41 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். லைட் பாடியில் 7, தேக் பாடியில் 7 மற்றும் யானைப் பாடியில் 27 என மூன்று பழங்குடியினர் குடியிருப்புகளை ஒட்டி இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கேமராக்களில் அப்பகுதியில் நான்கு புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாரியை கடித்துக் கொன்ற புலியை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடமாடிய புலிகளின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் புலி தாக்கி இறந்த மாரியின் உடலில் உள்ள காயங்களில் இருந்தும் டிஎன்ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.  உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் புலிகள் நடமாடும் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புலிகளின் எச்சங்கள் ஆகியவைத்தின் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு மாரியை தாக்கிய புலியை அடையாளம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிக்காக சிறப்பு நிபுணர்களை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் தெப்பக்காடு தேக் பாடி மற்றும் புதிய கால்நடை மருத்துவ கட்டிட பகுதி வழியாக வந்த புலி ஒன்று மாயார் ஆற்றை கடந்து மாரியை தாக்கிய பகுதி வழியாக நடந்து சென்றதை குடியிருப்பு வாசிகள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் லைட் பாடி பகுதியில் வசித்த பொம்மன் என்ற வேட்டை தடுப்பு காவலரை பகல் நேரத்தில் புலி தாக்கிய போது அவர் அதிலிருந்து காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து கடந்த மாத இறுதியில் மாரி என்பவர் புலி தாக்கி இறந்த நிலையில், மேலும் ஒரு புலி தனியாக இப்பகுதியில் நடமாடியதால் குடியிருப்பு வாசிகள்  அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக கள இயக்குனரின் உத்தரவுப்படி வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.  மூன்று குடியிருப்பு பகுதிகளை ஒட்டி 24 மணி நேரமும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு வாசிகள் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது.  இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடங்களை குடியிருப்பு வாசிகள் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யானை பாடி குடியிருப்பு வாசிகள் தெப்பக்காடு பகுதி வருவதற்கு சாலையை சுற்றி வருவதை தவிர்த்து  பாதுகாப்பாக ஆற்றை கடந்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: