அரசியலில் எனது எதிரி சாதிதான்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் புத்தகம் சம்பந்தமான நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:

உயிரே, உறவே, தமிழே என்ற இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை. பா.ரஞ்சித்தின் ஆரம்பகால விழாக்களில் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நானும், அவரும் இல்லாதபோதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாசாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆளும் கட்சி, ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன். நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் பட்சத்தில், ஜனநாயகம் நீடுழி

வாழும். தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன் தான் என்று நினைக்கும் பட்சத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும். அரசியலில் எனது மிக முக்கிய எதிரி சாதிதான். அதை இன்று நான் சொல்லவில்லை; என் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: