எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் பெயர் மாற்றம் செய்வது எப்போது?.. ‘அகதிகள் முகாம்’ வாசகம் மாறுமா என காத்திருப்பு

எட்டயபுரம்: இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டு பல மாதங்களாகியுள்ள நிலையில் எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் தற்போது வரை இலங்கை அகதிகள் முகாம் என போர்டில் குறிப்பிட்டு இருப்பது இலங்கை தமிழர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வழிகாட்டி பலகையில் அகதிகள் முகாம் வாசகம் மாறுமா என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை  தொடர்ந்து அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்டபம் வழியாக தமிழகம் வந்தனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும்  முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு இருக்க இடம், உண்ண  உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழக அரசால் செய்து தரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலே  அகதிகளாக வாழ்ந்து வந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அகதிகள்  முகாமில் தான் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அகதிகள் என்ற பெயரே நிலைத்து போனது.

சொந்த மண்ணில் தாங்கள் அகதிகளாக வாழ்கிறோம் என்ற எண்ணமும் வருத்தமும் அவர்களுக்கு தோன்றக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கை அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என  பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதோடு அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த  புதிய வீடுகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார். தாங்கள்  அகதிகள் முகாமில் வாழ்கிறோம் என்ற மனச்சஞ்சலத்தில் இருந்த இலங்கை தமிழர்கள்  தாங்கள் வாழும் இடத்தை தமிழர் மறுவாழ்வு மையமாக பெயர் மாற்றம் செய்ததோடு  வசதிகளும் செய்து கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது. இதற்கான வழிகாட்டி அறிவிப்பு பலகை  தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதில்  இலங்கை அகதிகள் முகாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழர் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல மாதங்களாகியும், முகாம் வழிகாட்டி அறிவிப்பு பலகையில் பெயர் மாற்றப்படாமல் உள்ளது.  ஆரம்பத்தில் வைக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாம் என்ற வாசகமே உள்ளது.

இது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை கண்டு கொள்ளாதது போல் உள்ளது. எனவே தாப்பாத்தி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் பெயர் பலகையை மாற்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என மாற்றி வைக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: