ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

தென்காசி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மேலமரத்தோணி, சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; முதலமைச்சர் தலைமையிலான அரசில் அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இத்தகைய திராவிட மாடல் ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வைகோ அவர்களின் ஏற்பாட்டில், அவரது முப்பாட்டனாரால் தோற்றுவிக்கப்பட்டு வழி வழியாக இந்த ஊர் மக்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலின் குடமுழுக்கு பெருவிழாவில் இன்று கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 500 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குறிப்பாக 100 ஆண்டுகள் பழமையான இது போன்ற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடந்தேறி வருகிறது. அதற்கு உதாரணமாக, இன்றைய தினம் இத்திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் திருப்பணிகளை மேற்கொண்ட வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சங்கரன்கோவில், அருள்மிகு கோமதி அம்மன் உடனுறை சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர், மரத்தேர், திருக்கோயில் குளம், தெப்பக்குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு இத்திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  26 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலின் சார்பில் ரூ.90 லட்சம் செலவில் தெப்பக்குளத்தினையும், ரூ.10 லட்சம் செலவில் திருக்குளத்தினையும் சீரமைப்பதோடு ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் இத்திருக்கோயிலின் திருப்பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

அதில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலான பணிகளை உபயதாரர்கள் செய்து தருகின்றனர். மேலும், திருக்கோயிலில் இடம் பெற்றுள்ள மூலிகை ஓவியங்கள் முழுவதுமாக ரூரல் பெயிண்டிங்  மூலமாக பழைய பொலிவுடன் அமைத்திட சுமார் ரூ.2 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இத்திருக்கோயிலுக்கு ரூ.7.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். தெப்பக்குளம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை உடனடியாக இந்து சமய நிலையத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்று அனுப்பிய கருத்துருவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்கள். யானையைப் பொறுத்தளவில் இந்திய வனத்துறையின் சட்டப்படி யானைகளை நேரடியாக திருக்கோவிலுக்கு பெற முடியாது.

யானைகளை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முன் வந்தால் திருக்கோயிலும், இந்த சமய அறநிலையத்துறையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. முதலமைச்சர், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் 100 கோடியை ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அது குறித்து கணக்கீடு செய்து ஒட்டுமொத்தமாக 509 திருக்கோயில்கள் கண்டயறியப்பட்டுள்ளன. அதில் இந்தாண்டு 112 திருக்கோயில்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வருகின்ற ஆண்டும் 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சிறப்பு நிதி கோர இருக்கின்றோம். முதலமைச்சர் நிச்சயமாக நிதி வழங்குவார் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் E.ராஜா, டாக்டர் T.சதன் திருமலைக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: