குளிர்கால பராமரிப்பு செலவு அதிகரிப்பால் வேம்பார் கருப்பட்டி விலை உயர்வு

குளத்தூர் : குளிர்கால பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பால் வேம்பார் கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி  மாவட்ட எல்லை பகுதியான வேம்பார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  பெரும்பாலானோர் பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயாரித்து நேரடியாகவும், சில்லறைக்கும்  விற்பனை செய்து வருகின்றனர். வேம்பாரை பொருத்தவரை கன்னியாகுமரி, ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக  இருப்பதால் வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் கருப்பட்டி  விற்பனை கடைகள் உள்ளன. மேலும் வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் விரும்பி வாங்கும்  பொருளாக வேம்பார் கருப்பட்டி உள்ளது.

மருத்துவம் சார்ந்த பொருளாகவும்  பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து சுக்கு கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்பட  அனைத்துமே கலப்படமின்றி இருந்தால் அது சிறந்த மருந்து பொருளாகிறது. இவ்வாறு  மருத்துவ குணம் நிறைந்த கருப்பட்டியை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை  வியாபாரிகள் கடைகளில் விற்பனைக்காக தேக்கி வைக்கும் கருப்பட்டிகளை கெடாமலும்,  இளகிய தன்மை ஏற்படாமல் தடுக்கவும் பராமரித்தல் அவசியமாகிறது.

குடோன்களில் இருப்பு வைத்திருந்தால் பணியாளர்களை  கொண்டு தேங்காய் சிரட்டைகள் மூலம் புகை போட்டு குறிப்பிட்ட வெப்பநிலைக்குள்  இருக்குமாறு கருப்பட்டியை பாடம் செய்து பாதுகாப்பாக வைக்கின்றனர்.  கடைகளில் வைத்திருப்பவர்கள் நெருப்பு மூலம் பராமரிக்க இயலாத சூழ்நிலையில்  சணல் சாக்குப்பைகளை தைத்து திரையாக மறைத்து வெப்பத்திற்காக சுமார் 600  வாட்சிற்கும் மேலான மின்விளக்குகள் 2 மின்விசிறிகள் அமைத்து  பகல்,  இரவு என நாள் முழுவதும் இயக்கி பாதுகாக்கின்றனர்.

இத்தகைய பராமரிப்பினால்  மின் கட்டணம், பணியாளர்கள் ஊதியம் என பல வகையில் செலவு ஏற்படுகிறது.  இதனால் மற்ற காலக்கட்டத்தில் கிலோ ரூ.200க்கு விற்பனையாகும் கருப்பட்டி, மழை மற்றும்  குளிர் நேரங்களில் கிலோ  ரூ.300 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து இப்பகுதி  வியாபாரிகள் கூறியதாவது: பனை தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்  கருப்பட்டிகளை தட்பவெப்ப நிலையின் காலத்திற்கேற்றார் போல் முறையாக பராமரிக்காவிட்டால் கொள்முதல் செய்து தேக்கி வைத்திருக்கும் கருப்பட்டிகள் உருக்குலைந்து வீணாகிவிடும்.

பராமரிப்பு மற்றும் இதர செலவுகளால் மற்ற காலங்களில்  விற்கப்படும் கருப்பட்டி விலையில் சற்று அதிகரித்துதான் விற்க  வேண்டியுள்ளது. விலை உயர்வு என்றாலும் அத்தியாவசிய மற்றும் மருத்துவ  தேவைக்கும் பயன்படுவதால் பொதுமக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வாங்கி  செல்கின்றனர். இயற்கையாகவே பதநீர் உற்பத்தி இல்லாத நேரங்களிலும் இதுபோன்ற  குளிர் நேரங்களிலும் கருப்பட்டி விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, என்றார்.

Related Stories: