ரெப்போ வட்டி 6வது முறையாக உயர்வு வீடு, வாகன கடன் இஎம்ஐ மேலும் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், நடப்பு மாதத்துக்கான கூட்டம் கடந்த 6ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.  

இதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவீதம் அதிகரித்து 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் 4 பேர் வட்டி உயர்வுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இது முடிவு செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரெப்போ வட்டி யை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாத தவணை (இஎம்ஐ) அதிகரித்து வருகிறது.  ஏற்கெனவே பெரும்பாலான வங்கிகளில் கடன் வட்டி 9 சதவீதத்தை தாண்டியுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவோருக்கு மேற்கண்ட முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ரெப்போ வட்டி அடிப்படையில்தான் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை  நிர்ணயம் செய்கின்றன.   கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை இரண்டரை சதவீதம் அளவுக்கு ரெப்போ வட்டி உயர்ந்திருக்கிறது. தற்போதைய அறிவிப்புடன் சேர்த்து தொடர்ந்து 6 மாதங்களாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் 2023-24 நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பண வீக்கம் வரும் நிதியாண்டில் தற்போதைய சராசரி அளவான 6.5 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் அரசியல் பதற்றம், பொருட்கள் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் அதிகரித்து வந்துள்ளது.     கடந்த ஏப்ரல்  செப்டம்பர்  அரையாண்டில்   நடப்புக் கணக்கு பற்றாக்குறை  3.3 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர்  மார்ச்சிலும் பெரிய அளவில் மாற்றமின்றிக் காணப்படுகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 57,680 கோடி டாலராக உள்ளது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை பரிசோதனை ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் மேலும் 5 வங்கிகள் இணைய உள்ளன.  என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி உயர்வால், ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள் மட்டுமின்றி, புதிதாக கடன் வாங்குவோரும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன எனவும், இது ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகையில், ‘‘ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்தியது ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பாக, மலிவு விலை வீடுவிற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒன்றிய பட்ஜெட்டிலும் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கு வீட்டுக்கடன்களுக்கான வரி விலக்கு பெறுவதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது.

கடந்த 2 காலாண்டுகளாக ரியல் எஸ்டேட் மதிப்பும் அதிகரித்து விட்டது. இவையெல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக ரியல் ஸ்டேட் துறையில் மலிவு மற்றும் நடுத்தர வீடுகள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றே கூறலாம்’’ என்றனர். கடன் சந்தை ஆலோசகர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போதைய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்வால், இஎம்ஐ தொகையில் 2 முதல் 4 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது. கடன் தவணைக் காலம், கடன் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப இது மாறுபடும். இந்தச் சுமையை ஈடுசெய்யத் தவணை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி வரலாம்’’ என்றார்.

ஜி20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகளும் இனி யுபிஐ பரிவர்த்தனை செய்யலாம்

இந்தியாவுக்கு வரும் ஜி 20 நாடுகளைச் சேர்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இனி யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட விமான நிலையங்களில் இதற்கான வசதி இருக்கும். முதற்கட்டமாக ஜி20 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இந்த வசதியை, பின்னர் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பீம், ஜி-பே, போன் -பே மற்றும் பல்வேறு வங்கிகள் யுபிஐ மொபைல் ஆப்ஸ் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை அளிக்கின்றன.

‘‘இந்திய வங்கி அமைப்பு வலுவானதாக உள்ளது’’

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்தள்ளது. இந்நிலையில், நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், ‘‘வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட இந்திய வங்கித்துறை மிகவும் வலுவானதாக உள்ளது. இதுபோன்றவற்றால் (அதானி குழும விவகாரம்) பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை விடவும் வங்கி அமைப்பு மிகுந்த வலிமை மிக்கதாக உள்ளது.

வங்கித்துறை பங்குச்சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல’’  என்றார். அதானி பெயரையோ, அவரது குழும பெயரையோ அவர் குறிப்பிடவில்லை. முன்னதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்  ‘‘இந்திய வங்கித் துறையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கிகளின் ஸ்திரத்தன்மையை ப் பேணக்கூடிய வகையில், ரூ.5 கோடிக்கும் மேலான  கடன்கள் குறித்து வங்கிகள் தகவல் தெரிவிக்கவேண்டும்’’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: