சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள நேரு சாலையில் கண்ணதாசன் நகரில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை  சாலையிலேயே விடுகின்றனர்.

சாலையில்  கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில்  3 முறை பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், தலைமை எழுத்தர் பங்கஜம் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’நேரு பஜார் பகுதி 7வது வார்டு  கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வீடுகளுக்கு கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 3 முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கண்ணதாசன் நகர் பகுதியில் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுசம்பந்தமாக 7வது வார்டு கவுன்சிலரும் துணைத் தலைவருமான குமரவேல் கூறும்போது, ‘’கண்ணதாசன் நகரில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்து அதிமுக ஆட்சியில் மனு கொடுத்துள்ளனர்.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு  பேரூராட்சியின் முதல் கூட்டத்திலேயே சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். விரைவில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படும்’’ என்றார்.

Related Stories: