சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்காவில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்: சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்கா ஊழியர்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில்கொண்டு, பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறுசேரி தகவல் தொழில் நுட்ப மென்பொருள் பூங்கா உள்ளது. இங்கு டிசிஎஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓஎம்ஆர் சாலையின் முக்கிய இடங்களுள் ஒன்றாக சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்கா உள்ளது.

பூங்காவை மையமாக வைத்து ஓஎம்ஆர். சாலையில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், அதிநவீன திரையரங்குகள் என ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஓஎம்ஆர் சாலையில் 6 லட்சம் பேர் பயணிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிறுசேரி சிப்காட் பூங்காவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மென்பொருள் பொறியாளர்களின் நலன் கருதி, தி.நகர், சைதாப்பேட்டை, அடையாறு, பாரிமுனை, கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் சிறுசேரி சிப்காட் பூங்காவின் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. பேருந்து நிலையம் கட்டப்படாததால் சாலையோரம் நிறுத்தப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகின்றனர். பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பிடம், பணியாளர்கள் ஓய்வறை போன்ற வசதி செய்து தரமுடியும். தற்போது சாலையோரம் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் கழிப்பறை வசதிகூட இல்லாமல் ஓட்டுனர்களும், நடத்துனர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி சிறுசேரி மென்பொருள் பூங்காவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்துநிலையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: