பூக்கடை பகுதியில் பாத்ரூம் உபயோக பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து

தண்டையார்பேட்டை: பூக்கடை பகுதியில் உள்ள பாத்ரூம் உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் இம்ரான் (25). கடந்த ஒரு வருடமாக, பூக்கடை பார்க்டவுன் வெங்கடாசல முதலி தெருவில்  பாத்ரூம் உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 4ம்தேதி சனிக்கிழமை, இம்ரான் விற்பனை முடித்துவிட்டு,  மாலை 6 மணியளவில் கடையை பூட்டிவிட்டு, உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பழனி சென்றார். திருமணம் முடிந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினார்.  

இதனிடையே, இம்ரானின் பாத்ரூம் உபயோக பொருட்கள் கடையில் இருந்து கரும் புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அதிகாரிகள் தேவேந்திரன், முனுசாமி ஆகியோர் தலைமையில் உயர் நீதிமன்றம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 3 தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து, பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதும் தெரியவந்தது. மேலும், இப்பகுதி முழுவதும் அதிகமான கடைகள் உள்ளன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: