12 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு தஞ்சை குற்றவாளி சென்னையில் கைது: விமான நிலையத்தில் சிக்கினார்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவர் மீது கடந்த 2011ம் ஆண்டு, தடை உத்தரவையும் மீறி ஒரு கும்பலை சேர்த்து, பயங்கர ஆயுதங்களுடன் சென்று மோதலில் ஈடுபட்டதாக பாப்பநாடு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாப்பநாடு போலீசார், சசிகுமாரை தேடினர். ஆனால், போலீசிடம் சிக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சசிகுமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், தஞ்சையைச் சேர்ந்த சசிகுமாரும் வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சசிகுமார், 12 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. குடியுரிமை அதிகாரிகள் இதுகுறித்து, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசார், சசிகுமாரை கைது செய்து அழைத்து செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர்.

Related Stories: