சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில்  உள்ள நீர்வழித்தடங்களில் தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், கொசுக்கள் உற்பத்தியினை கட்டுப்படுத்த 68 எண்ணிக்கையிலான வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 240 புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய 300 கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், இன்று (07.02.2023) தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட லாக் நகர் மற்றும் வார்டு-123க்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி குப்பைக் கொட்டும் வளாகம், மற்றும் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட முல்லை நகர், தென்றல் காலனி, மலர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: