மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 மையங்களில் கணினி வழியில் இன்று நடக்கிறது: 4968 பேர் தேர்வை எழுதுகின்றனர்

சென்னை: மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 மையங்களில் கணினி வழியில்  இன்று நடக்கிறது. இத்தேர்வை 4968 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 4969 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் எழுத்து தேர்வுக்கு ஆண்கள் 2405 பேர், பெண்கள் 2561 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2  பேர் என 4968 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு இன்று நடக்கிறது காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல்(பட்டயப்படிப்பு தரம்), விலங்கியல்(பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது.

அதாவது பகுதி ‘அ’ வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி ‘ஆ’-வில் பொது அறிவு (பட்டயப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. முதல் தாள் தேர்வு 300 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் தேர்வு 150 மதிப்பெண்கள் என மொத்தம்  450 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இந்த கணினி வழித்தேர்வு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நடக்கிறது. சென்னையில் ஒரு மையத்தில் இந்த தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் இந்த தேர்வை 1156 பேர் எழுதுகின்றனர் ஒரு தேர்வு மையத்திற்கு ஒருவர் வீதம் 13 முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: