துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: 2,300 பேர் பரிதாப பலி

* 7.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நடந்த பூகம்பத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம்

* இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு

அங்காரா: துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் 2,300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 7.8 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் துருக்கி, சிரியாவுக்கு உதவ இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன.

சிரியா நாட்டின் எல்லையில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4.17 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரில் இருந்து 33 கிமீ தொலைவில், 18 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரில் இருந்து 330 கிமீ தொலைவில் உள்ள துருக்கியின் தியர்பாகிர் நகர் வரையிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

மக்கள் பலரும் உயிர் தப்பிக்க வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஏற்கனவே போரில் குண்டு வீச்சால் விரிசலடைந்த, சேதமடைந்த சிரிய எல்லைப்பகுதி மக்களின் வீடுகள் மொத்தமும் இடிந்து பல உயிர்களை காவு வாங்கின. இந்த பயங்கர நிலநடுக்கத்தால், துருக்கியில் 7 மாகாணங்களில் 1,498 பேர் இறந்தாக அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 5300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதே போல, சிரியா அரசின் கட்டுப்பாட்டில் 430  இறந்ததாகவும், 1000 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளர்ச்சிப் படை  கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 390க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக  கூறப்பட்டுள்ளது. இடிந்த கட்டிடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள்  சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரவும்  வாய்ப்பிருப்பதாக மீட்புப் படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் காஜியான்தெப் மற்றும் கஹ்ராமன்மராஸ் மாகாணங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இங்கு 900 கட்டிடங்கள் இடிந்திருப்பதாக அந்நாட்டின் துணை அதிபர் ஒட்கே கூறி உள்ளார். துருக்கியிலும் சிரியாவிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டிடங்களும், மரண ஓலங்களுமாக காட்சி அளிக்கின்றன. இதற்கிடையே, அதிகாலையில் இருந்தே அடுத்த நில அதிர்வுகளும், நிலநடுக்கங்களும் ஏற்பட்டு மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி வருகின்றன. 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 50 முறை நில அதிர்வுகளும் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதில்  அதிகபட்சமாக நேற்று மாலை 7.5, 6.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்பட்டன. இதில் மேலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இத்துடன் கடும் பனி, குளிர் நிலவுவதால் மீட்புப்பணிகள் சவாலாகி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் பீதியுடன் விரைந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, 20 ஆண்டுகளில் மிக மோசமான பேரிடரை சந்தித்துள்ள துருக்கிக்கு மீட்புப்பணிகளில் உதவ இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிரியாவில் பல இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது.

Related Stories: