சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க  பரிந்துரை செய்தது. இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று பேர் மாவட்ட நீதிபதிகளாவர். வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன்,  விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் வழக்கறிஞர்கள். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் மீண்டும் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து அதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும்  இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

* விக்டோரியா கவுரி நியமனம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க செய்த பரிந்துரைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு கருத்து வெளியிட்ட விக்டோரியா கவுரி பாஜவில் உறுப்பினராக உள்ளார். அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பையும் வகித்தவர் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜராகி, விக்டோரியா கவுரி நியமனம் தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: