ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கும் முடிவை ரத்து செய்ததை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, செம்மடுவு கிராமத்தில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க, முந்தைய ஆட்சியில் வழங்கிய அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, செம்மடுவு கிராமத்தில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு 15 கோடியே 84 லட்சம் ரூபாய் ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அது தொடர்பாக 2020ம் ஆண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2021 மே மாதம் ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க அனுமதியளித்த அரசாணையை ரத்து செய்து, கொடைக்கானலில் தேசிய அளவிலான கூட்டுறவு, மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க முடிவெடுத்து 2021 நவம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிமுக விவசாய அணிச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க ஏற்கனவே பெருந்தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசு ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்காக வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.செல்வராஜ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: