செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா: கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகள் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் முத்தாலம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 27வது ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பூங்கரகத்துடன் கிராமம் முழுவதும் வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர், கோயிலில் பக்தர்கள் முதுகின் மீது உரல் வைத்து நெல் குத்துதல், பச்சை முட்கள் மீது நடத்தல், பறவை காவடி சென்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு செய்வது போன்ற நேர்த்திக்கடன்களை செய்தனர்.

மேலும் கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கைகளால் வடைகள் சுட்டு சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். அப்போது, புதுமண தம்பதிகள், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டி கொண்ட பெண்கள் சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை(வடைகள்) ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி திருவீதிஉலா வந்து அருள்பாலித்தார். விழாவில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: