சுற்றுலாத்தலமான ஏலகிரியில் ₹9.50 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணி-உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு

ஏலகிரி : ஏலகிரியில் ₹9.50 கோடி மதிப்பீட்டில் சாலை  புதுப்பிக்கும் பணியை  உதவி கோட்ட பொறியாளர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை  14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலாத்தளமாக ஏலகிரி மலை சிறப்புற்று விளங்கி வருகிறது.

ஏலகிரி நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் பசுமை நிற கோலத்தில் அமைந்துள்ளது. பொன்னேரி பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு  செல்லும் போது மலைப்பாதையில்  சுமார் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இம்மலை 1410 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் அழகான  தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.இம்மலையில் மக்கள் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு விவசாயம், கறவை மாடுகள், கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட பணிகளை மலைவாழ் மக்கள் செய்து வருகின்றனர்.

ஏலகிரி சுற்றுலா தலம் என்பதால் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

 இங்கு பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சாலைப்பணிகள், சுற்றுலா தலத்தினை மேம்படுத்துதல், உள்விளையாட்டு அரங்கம், சாகச விளையாட்டுகள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மலைப்பாதை சாலையை சீரமைக்க திருப்பத்தூர் மாவட்ட கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின் பேரில் ₹9.50 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் நேற்று சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சுற்றுலா தலம் என்பதால் அதிக வாகனங்கள் வருவதால் மலைப்பாதைகளில் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும், சாலை பணி நடைபெறுவதால், வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன், சாலைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் சாலை பணிகள் நடைபெறுவதால் நேற்று  வாகன நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: