அதானி குழும முறைகேடு: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக முடங்கியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து  பிப்.1-ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2 நாட்களும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழும நிறுவனங்கள் மீது அண்மையில் மோசடி குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. போலி நிறுவனங்களை தொடங்கி, தனது பங்கு விலையை உயர்த்திக்காட்ட  மோசடி செய்தது போன்ற அடுக்கடுக்கான புகார்கள் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து 15-வது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். முன்னதாக நாடாளுமன்ற வாளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், அவை தொடங்கியதும் அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: