அரசியல் சித்து விளையாட்டு களமாக தமிழ்நாட்டை மாற்ற பாஜ முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் நாட்டை அரசியல் சித்து விளையாட்டுகளமாக மாற்ற பாஜ முயற்சி செய்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் ஆலந்தூர் மண்டி தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவர் முகமது முனீர் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு தொல் திருமாவளவன் பேசும்போது ‘‘ ஜம்மு காஷ்மீர் அந்தஸ்தை பறித்தார்கள். அண்டை நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமைகளை பறிக்க சிஏஏ, என்ஆர்சி, போன்று சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தங்களது இறுதி செயல் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்கள் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் மூலம் இந்துக்களையும் இந்து சாமியார்களை படுகொலை செய்து  இஸ்லாமியர்கள் மீது பழி போட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்வேறு தலைவர்கள் இருந்தும் கோத்ரா சம்பவம் மூலம் மோடி பிரதமரானார். மீண்டும் 2024 இல் அவர் பொறுப்பேற்றால், இந்த பொதுசிவில் சட்டம்  அமல் படுத்தப்படும்

பா.ஜ.வை அனைத்து தரப்பினரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒன்று திரள மறுக்கிறார்கள். திரள விடாமல் பா.ஜ. வேலை செய்கிறது அதுபோல திமுக, திராவிட அரசியலை எதிர்க்க முடியாமல் அதற்கு எதிராக உள்ளவர்களை  ஊக்கப்படுத்துவது போல் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ. அரசியல் சித்து வேலைகளை செய்து வருகிறது. கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். பாஜ தலையிடாமல் இருந்து இருந்தால், சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்து இருக்கும்’’ என்றார்.

Related Stories: