குரோம்பேட்டை மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ரூ.110 கோடி ஒதுக்கீடு: அரசு நடவடிக்கை

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆய்வகம், 24 மணிநேர விபத்து சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, ஓமியோபதி, யோகா, மருந்தகம், காது, மூக்கு, தொண்டை, கண் போன்ற சிகிச்சைகளுக்கு என தனித்தனி பிரிவுகள் உள்ளன.  இங்கு தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். சுமார் 213 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதத்திற்கு சுமார் 250 முதல் 300 பிரசவங்கள்  நடக்கிறது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் விபத்து, மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால், இங்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அல்லது சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு மேல் சிகிச்சைக்காக செல்பவர்கள் நீண்ட தூரம் ஆம்புலன்ஸ் மூலம் பயணம் செய்வதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்படுவதால், சிகிச்சைக்காக செல்பவர்கள் சில சமயங்களில் பாதி வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, இந்த மருத்துவமனையை பல்வேறு வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல், தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை என்பதால் அதனை தரம் உயர்த்த வேண்டும் என பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பலமுறை சட்டமன்றத்திலும் பேசியதோடு, திமுக ஆட்சி அமைந்த உடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதன்படி, திமுக ஆட்சி அமைத்தவுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூ.110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது. மேலும், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டிட பணிகளை துவக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் கட்டுவதற்கு ஒரு சில வாரங்களில் அரசாணை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, கிடைக்கும் பட்சத்தில் ரூ.110 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதில், 400 படுக்கை வசதிகள், இருதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர், உயர்தர ஆய்வகம், தீக்காயம் வார்டுகள், பிணவறை, பார்க்கிங் பகுதி என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாவட்ட மருத்துவமனை கட்டப்படவுள்ளது.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன், நோய்களுக்கும் சிறப்பு பிரிவுகள் தொடங்கி சிறப்பு சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுதவிர அறுவை சிகிச்சை அளிக்க 5க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் அந்த கட்டிடத்தில் வரவுள்ளதாகவும், பொதுமக்களின் வசதிக்காக கட்டண வார்டுகள் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: