மோசடி வழக்கு பிரபல வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

திருவனந்தபுரம்: மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜை போலீசார் கைது செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் பாபுராஜ். 1994ல் பீஷ்மாச்சாரியர் என்ற படத்தில் அறிமுகமான இவர், மாயாமோகினி, ராஜமாணிக்கம், ஜோஜி, கூமன் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தை தயாரித்துள்ள இவர், வீரமே வாகை சூடும் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக இடுக்கி மாவட்டம் கல்லாரில் ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் பாபுராஜ் அந்த விவரத்தை மறைத்து கடந்த இரு வருடங்களுக்கு முன் கோதமங்கலத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு ரூ.40 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.

இந்நிலையில் ரிசார்ட் நடத்துவதற்காக நகராட்சி அலுவலகத்தில் லைசன்ஸ் வாங்கச் சென்றபோது தான் அருணுக்கு இந்த விவரம் தெரியவந்தது.  இதையடுத்து அவர், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். ஆனால் பாபுராஜ் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இது குறித்து அருண் அடிமாலி போலீசில் புகார் செய்தார். போலீசார் பாபுராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே முன்ஜாமீன் கோரி பாபுராஜ் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அடிமாலி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதன்படி நேற்று போலீஸ் நிலையத்தில் ஆஜரான நடிகர் பாபுராஜை விசாரணைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: