ஆபத்தை உணராமல் ஆழியார் அணை, ஆற்றுப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து தடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர்  ஆற்றோர பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். அந்த இடங்களில் பயணிகள் குளிக்க தடை உள்ளது. ஆனால், சில சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிக்கின்றனர். ஆழமான பகுதி மற்றும் மணல் நிறைந்த சேறு பகுதியாக இருப்பதால் உயிர்பலி ஏற்படுகிறது. விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், தடை ஏற்படுத்தப்பட்ட பகுதி என்று தெரியாமல் ஆழியாற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர்.

அணையில் தற்போது தண்ணீர் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் நீர்நிலையை பார்த்து ஆனந்தத்தில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகிறது. ஆழியார் அணைப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அடுத்தடுத்து பலியாகும் சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அணையின் மேல் பகுதி, பூங்கா, ஆழியாறு பாலம், சுற்றுலா மாளிகை பின்பகுதி உள்ளிட்ட பல இடங்களில், போலீஸ் சார்பில் சுமார்  6 ஆண்டுகளுக்கு முன்பு விழிப்புணர்வு  போர்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், அவை தற்போது மாயமான நிலையில் உள்ளது. மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் சுமார் 98 அடியாக உள்ள நிலையில், விதிமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள், தண்ணீரில் சிக்கி கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.

ஆழியாரில் துவங்கி கேரள மாநிலம் பாலக்காடு வரையிலும் உள்ள ஆழியாற்றில் ஆங்காங்கே தடுப்பணை பகுதிகளில், தண்ணீர் அதிகளவு செல்லும்போது, சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். ஆனால், ஆற்றில் குளிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளில், ஆழம் எது என தெரியாமல் இருப்பதால், சில நேரத்தில் விபரீத சம்பவம் நேரிடுகிறது. எனவே, ஆழியார் அணை மட்டுமின்றி, ஆழியாற்று பகுதியிலும் உயிர்பலியை தடுக்கவும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும், எச்சரிக்கை போர்டுகள் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு முறையாக கண்காணித்து தடுக்கவும், முறைப்படுத்தவும்  வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட  பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: