இரண்டு ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் கவர்னர் உரை

திருமலை:  சட்ட மேலவை உறுப்பினர் நியமனத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் பரிந்துரை செய்தவரை நியமிக்காததால் கடந்த இரண்டு வருடங்களாக கவர்னருக்கும்,

முதல்வருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரை இல்லாமல் தொடங்கியது. இந்த ஆண்டு     தெலங்கானா மாநில அரசு அனுப்பிய வரைவு பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.  இதையடுத்து, கடந்த 30 ஆம் தேதி, மாநில அரசு தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியது.

இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்குமாறு இரு தரப்பினரையும் நீதிமன்றம் கேட்டு கொண்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவார் என்று மாநில அரசு கூறியதால் முதல்வர் அலுவலகத்திற்கும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. நேற்று  காலை உரையாற்ற வந்த ஆளுநரை பேரவைத் தலைவர் பி.சீனிவாஸ், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டமேலவை தலைவர் ஜி.சுகேந்தர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு தயாரித்த உரையை சட்டப்பேரவை, சட்டமேலவையின் கூட்டு கூட்டத்தில் வாசித்தார்.

Related Stories: