அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும்: பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி

சென்னை: அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளித்துள்ளது.பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி ஒன்றிய, மாநில அரசு துறைகளிடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடந்த வழக்கில் பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேனா நினைவு சின்னம் குறித்து கிராபிக்கல் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்தது.

3 பகுதிகளாக நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ள நிலையில், முதல் பகுதியில், கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை சுமார் 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட உள்ளது. கான்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும் என்றும் கடற்கரையின் தன்மை மாறாத வகையில் அதற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

15 மீட்டர் இடைவெளியில் தூண்கள் அமைக்கப்படும் என்பதால், மீன்பிடி படகு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியாக, இரும்பு பாலம் முடியும் இடத்தில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. பேரிடர்களை கருத்தில் கொண்டு, அவற்றைத் தாங்கும் வகையில் உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடுத்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, பேனா நினைவுச்சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, பத்திரிகைகளில் தாம் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை என்று கூறினார். எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளித்துள்ளனர்.

Related Stories: