தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்

தாராபுரம்:  தாராபுரம் அருகே தாளக்கரை கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில்  ராட்சத முதலை தென்பட்டதாக மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை அமராவதி ஆற்றில் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை இருப்பதை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றுக்கு துணி துவைக்க சென்றபோது பார்த்துள்ளார். இதனை உடனே தன்னிடம் இருந்த மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் தாராபுரம் அமராவதி ஆற்று படுகையில் முதலை நடமாடுவதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மூன்று மாதமாக அமராவதி ஆற்றில் அலங்கியம் ஊராட்சி சீத்தக்காடு என்ற இடத்தில் 2 முதலைகளும், கன்னிவாடி பேரூராட்சி மணலூர் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் ஒரு முதலையும் நடமாடி வருகின்றன. இந்த முதலைகள் வனத்துறையினர் கையில் பிடிபடாமல் போக்கு காட்டி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் தற்போது தாளக்கரை கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் 8 அடி நீள முதலை இருப்பதாக பரவிய தகவல், அப்பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் அமராவதி அணை நிரம்பி அங்கிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட முதலைகள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு கொழுமம், கடத்தூர், கள்ளிவலசு, அலங்கியம், தாராபுரம், தாளக்கரை, கன்னிவாடி ஆகிய இடங்களில் உள்ள ஆற்றில் மீன், தவளை, நரி, முயல் உள்ளிட்ட உணவு கிடைக்கும் பகுதியில் முகாமிட்டு நீண்ட காலமாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2 முதலைகளை கடந்த 2  ஆண்டுக்கு முன் காங்கயம் வனத்துறையினர் வலை வீசி பிடித்து, அமராவதி முதலை பண்ணையில் சேர்த்தனர். அதேபோல தற்போதும் அமராவதி ஆற்றில் முகாமிட்டுள்ள முதலைகளையும் பிடித்து அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: