நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா

நெல்லை: தைப்பூச திருவிழா வரும் 5ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். பாதயாத்திரை பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீராடி ஓய்வெடுத்து செல்கின்றனர். அறுபடை  வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  கந்தசஷ்டி விழா மற்றும் தைப்பூச விழா சிறப்பு பெற்றது. இக்கோயிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் பிப்.5ம்தேதி வெகு விமரிசையாக  நடக்கிறது. தைப்பூச விழாவில் தென் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். நெல்லை,  தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும்  பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர், திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம்  உள்ளனர். பக்தர்கள் செல்லும் இடங்களில் ஆன்மீக அன்பர்கள் சார்பில் குடிநீர், பிஸ்கட், உணவுகளும் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் தங்கி ஓய்வு எடுத்து உணவருந்தும்  வகையில் சிறிய சரக்கு வாகனங்களில் முருகன் படம் மற்றும் சிலை  அலங்கரித்தபடியும், வாகனத்தில் பக்தி பாடல்கள் இசைத்தபடியும் ஏராளமான  பக்தர்கள், சரண கோஷம் முழங்க சாரை சாரையாக நெல்லை வழியாக திருச்செந்தூர்  நேக்கி சென்ற வண்ணம் உள்ளனர். பாதயாத்திரை பக்தர்கள் குழுவுடன் செல்லும்  வாகனத்தில் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் உடமைகள் உள்ளிட்டவை உடன் எடுத்து செல்கின்றனர்.

நீர்நிலைகள், கோயில்களின் அருகில் வாகனங்களை நிறுத்தி, சமைத்து உணவருந்தி செல்கின்றனர். இவர்கள் நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் நீராடி, கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் அருகே அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் உணவு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்து பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர். பாதயாத்திரை பக்தர்கள் சாலைகளில் வலது ஓரமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் போக்குவரத்து போலீசார், இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி அனுப்பி வைக்கின்றனர்.

Related Stories: