கம்பத்திலிருந்து மூணாறுக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்களின் போக்குவரத்துக்கான பஸ்களை இயக்கும் முக்கிய துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையாகும். தனியார் வசம் இருந்த இத்துறை கடந்த 1972 முதல் தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒருசில பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து பஸ்களை இயக்குகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் என 8 தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் மதுரை மண்டலமானது, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் 1, கம்பம் 2, குமுளி, தேவாரம், போடி என 6 பணிமனைகளிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வண்டிகளை இயக்குவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே 1976ல் செய்து கொண்ட பரஸ்பர ஒப்பந்தப்படி, தொடக்கத்தில் கம்பம் கிளைகளிலிருந்து கேரளப்பகுதிகளான குட்டிக்கானம் மற்றும் ஏலப்பாறை நகரங்களுக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியாறு, பாம்பனார், பகுதி பொதுமக்கள் தமிழகப்பகுதிக்கு வந்துசெல்ல இந்த பஸ்கள் பெரிதும் உதவியாக இருந்தது. தமிழக அளவில் தேனி மாவட்டம் சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில், கும்பக்கரை அருவி , சுருளி நீர்வீழ்ச்சி, சின்ன சுருளி, மேகமலை , குரங்கணி, கொழுக்குமலை மற்றும் வைகை அணை என மாவட்டம் முழுவதும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

அதேபோல தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கம்பம், போடி ஆகிய ஊர்களில் வழியாக 80 கிலோ மீட்டர் தொலைவில் தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறு உள்ளது. மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன. 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி, பனிப்பொழிவு இருக்கும். இந்த குளிருக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் மூணாறு படையெடுப்பர். தற்சமயம் மூணார் செல்ல வேண்டுமென்றால் தேனி சென்று அங்கிருந்து போடி மெட்டு வழியாக மட்டுமே செல்ல முடிகிறது. கம்பத்தை ஒட்டியுள்ள சுருளிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூணாறு செல்ல திரும்பி தேனி சென்று தேனியிலிருந்து மூணாறு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலும் தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியை காணமலே தேனியிலிருந்து மூணாறுக்கு செல்கின்றனர்.

இதனால் கம்பம் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தினமும் அதிகாலை 4 மணிக்கு தனியார் பேருந்து மட்டுமே மூணாறுக்கு கம்பத்திலிருந்து தேனி, போடி வழியாக இயக்கப்படுகிறது. அரசு சார்பில் கம்பமெட்டு ,நெடுங்கண்டம் , உடும்பஞ்சோலை வழியாக தினத்தோறும் தமிழக அரசு சார்பில் மூணாறுக்கு பேருந்து இயக்கினால் கம்பத்திலுள்ள வணிகம் மேலேங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி மேம்படும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கம்பத்தை ஒட்டியுள்ள சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூணாறு செல்ல மிக சிரமத்திற்க்கு ஆளாகின்றனர். அதனால் கம்பத்திலிருந்து கம்பமெட்டு, நெடுங்கண்டம் வழியாக மூணாறுக்கு அரசு பஸ் இயக்கினால் வர்த்தக அளவில் கம்பத்தில் நிறைய வளர்ச்சியில் ஏற்படும். கம்பத்தில் நிறைய ரெடிமேட் கார்மெண்ட்ஸ்கள் உள்ளது. நேரடியாக மூணாறுக்கு கம்பத்திலிருந்து அரசு பஸ் இயக்கினால் நிறைய வர்த்தகம் நடைபெறும். மேலும் சுற்றுலாப் பயணிகளால் கம்பத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். தேனிலிருந்து மட்டுமே மூணாறுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கம்பத்தில் இருந்து அதிகாலை ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மூணாறுக்கு பஸ் இயக்கும் கோரிக்கையை உடனே அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: