பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு

செய்யாறு: ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா புதுப்பாளையம் கூட்டு சாலையில் பாமக சார்பில் 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘குட்கா தடை சட்டம் தமிழகத்தில் செல்லாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசு குட்கா தடைக்கு அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும். 2 மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு காரணம் ஆளுநர்தான். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மதுகூட இல்லாத பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து’ என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘தமிழ்நாட்டை சார்ந்த திட்டங்களான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் நமக்கு நிதி ஒதுக்கவில்லை. தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். செய்யாறை தலைமை இடமாக்கி புது மாவட்டம்: பாமக கூட்டத்தில், ‘மிகப்பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: