கணவரின் தவறான உறவை தடுக்க கோரி 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் வந்தார். வழக்கமாக புகார் அளிக்க வரும் நபர்களை பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் விசாரணை நடத்திய பிறகே, உள்ளே அனுப்புவது வழக்கம். அதன்படி, நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்தின் 3வது நுழைவாயில் வழியாக 2 மகள்களுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்துக்  கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த பெண் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், தனது 2 மகள்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனே பெண் மற்றும் 2 மகள்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். உரிய நேரத்தில் போலீசார் மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பிறகு தற்கொலைக்கு முயன்ற பெண் உள்பட 3 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், புரசைவாக்கம் பிளவர்ஸ் சாலை 2வது சந்து பகுதியை சேர்ந்த சைலஜா (39) என்பவர், தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. மேலும் விசாரணையில், சைலஜாக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அப்பு (எ) அகஸ்டின் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பாவனா (14), ஏஞ்சல் (10) என 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் அப்பு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருவதாக கடந்த 28ம் தேதி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சைலஜா புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார், அப்பு மற்றும் சைலஜா ஆகியோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அப்பு தனது கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சைலஜா கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று கணவரை அழைத்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  உடனே, அப்புவின் கள்ளக்காதலி தனது வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த சைலஜா தனது 2 மகள்களுடன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க வந்த போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து வேப்பேரி மகளிர் போலீசார், தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் புகார் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: