ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு பில் நடைமுறையை மாற்றி ஒரே பில் போட நடவடிக்கை: தொமுச நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு பில் முறையை மாற்றி ஒரே பில் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று தொமுச நிர்வாகிகள் கூட்டுறவு துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினர். இதுகுறித்து, தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொமுச) பொதுச்செயலாளர் பொன்னுராம், டியுசிஎஸ் ராஜன் சுவாமிநாதன், சிந்தாமணி பாஸ்கரன், நாம்கோ பிரபு, சைதை சி.எம்.எஸ்.தணிகாசலம், காஞ்சிபுரம் பண்டகசாலை செல்வமணி, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது நியாய விலை கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.

ஆனால், கடந்த கால அதிமுக ஆட்சியில் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படும்போது 3 சதவீதம் அகவிலைப்படி விடுபட்டது. அதனால், அரசு ஊழியர்கள் 38 சதவீதம் பெறும்போது நியாயவிலை கடை ஊழியர்கள் மட்டும் 35 சதவீதம் பெறும் நிலை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு பில் போடும் நிலை உள்ளது. எனவே மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்து ஒரே பில் போட வழிவகை செய்ய வேண்டும். நியாய விலை கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 100 முதல் 150 கி.மீ. பயணம் செய்து பணி செய்யும் நிலை உள்ளது. எனவே அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்த வேண்டும். தமிழக அரசின் பொங்கல் சிறப்பு திட்டத்தை நியாய விலை கடை ஊழியர்கள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர்.

அவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா ஊக்கத்தொகை என்பதை மாற்றி ரூ.2 வழங்க வேண்டும். சமீபத்தில் தமிழ்நாடு கூட்டுறவு உணவு துறையின் குறிப்பாணையின்படி, கூட்டுறவு துறையின் ஆய்வு அலுவலர்களுக்கு TNFPS-Officer எனும் செயலியை அவர்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  நியாய விலை கடைகளின் வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: