பட்டியலின இளைஞரை சாதி பெயரை சொல்லி திட்டிய கவுன்சிலர்: ஆடியோ வைரல்

சென்னை: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (32). ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர், மாமல்லபுரம் பொதுப்பணி துறை சாலையில், சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அருகில் சிற்பக் கலைக் கூடம் வைத்திருக்கும் கன்னியப்பன் என்பவருக்கு போன் செய்து, சிலை செதுக்க கருங்கல் வேண்டும் என கேட்டுள்ளார்.  அதற்கு, அவர் நான் வெங்கப்பாக்கத்தில் உள்ளேன் கூறி போனை கட் செய்யாமல் இருந்துள்ளார். அப்போது, அவருடன் சென்ற மாமல்லபுரம் பேரூராட்சி 9வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் பூபதி என்பவர் எதற்கு போன் செய்தான் என கன்னியப்பனிடம் கேட்டு, சாதி பெயரை கூறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளார்.

மேலும், ஆதிதிராவிட சமுதாயத்தையும், அந்த மக்களையும் இழிவுபடுத்தும் விதத்தில் பேசி உள்ளார். மேலும், சுயேட்சை கவுன்சிலர் பேசிய ஆடியோ சமூக வளைதலத்தில் வைரலானது. இந்த ஆடியோவை கேட்ட விசிக மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் ஆத்திரமடைந்து 100க்கும் மேற்பட்டோர் விசிக மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு, புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஓ.இ.சங்கர் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரனிடம் ஆதிதிராவிடர் சமுதாயத்தை தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசிய மாமல்லபுரம் பேரூராட்சி 9வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் பூபதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து, டிஎஸ்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அனைவரும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் களைந்து சென்றனர். சுயேட்சை கவுன்சிலர் மீது புகார் கொடுக்க மாமல்லபுரம் காவல் நிலையம் முன்பு விசிக மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் 2 மணி நேரம் கோவளம் சாலை பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: