வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில்: சிசிடிவி கேமரா, சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், அங்கு சிசிடிவி காமிரா மற்றும் போக்குவரத்து சிக்னல்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி, ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் வகையில் சுமார் 18 கிமீ தூரத்துக்கு மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வண்டலூர்-கேளம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டியும் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்கள் நாள்தோறும் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான மணல், கருங்கல் லோடு லாரிகளும் அதிகவேகத்தில் சென்று வருகின்றன.

வண்டலூர்-கேளம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை சந்திப்பு பகுதிகளில் நாள்தோறும் பல்வேறு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் நாள்தோறும் தங்களின் உயிரை கையில் பிடித்தபடி வாகனங்களில் சென்று வரும் அவலநிலை நீடித்து வருகிறது. மேலும், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோர மின்விளக்கு எரியாத காரணத்தினால், அங்கு வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அங்கு சிசிடிவி காமிரா கண்காணிப்பு இல்லாததால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசார் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

எனவே, வண்டலூர்-கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், வெங்கப்பாக்கம், ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், கண்டிகை, கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர், கீழ்க்கோட்டையூர், மாம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் அமைக்கவும், அங்கு சிசிடிவி காமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: