பட்டாபிராமில் மந்தமாக நடைபெறும் ரயில்வே மேம்பால பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

ஆவடி: பட்டாபிராம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக புதிய ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி அருகே பட்டாபிராமில், சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, எல்.சி-2 ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியே அடிக்கடி மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருவதால், 45 நிமிடத்துக்கு ஒருமுறை ரயில்வே கேட் மூடப்படும். இதனால் நெடுஞ்சாலையை ஒட்டி ரயில்வே கேட்டை கடந்து செல்ல ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அவலநிலை நீடித்தது.

அப்பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2010-11ம் நிதியாண்டில் பட்டாபிராம் பகுதியில் ரூ.33.48 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து, பட்டாபிராமில் கடந்த 2018ம் ஆண்டு ரூ.52.11 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் துவங்கின. இதற்காக சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் பட்டாபிராம் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல், கடந்த ஆண்டு புதிய ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி, தற்போது மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் திட்ட மதிப்பீட்டு தொகையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையும் முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

இதனால் பட்டாபிராம் பகுதி மக்கள் சுமார் 10 கிமீ தூரத்துக்கு நாள்தோறும் சுற்றிவர வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, பட்டாபிராமில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையை தரமான முறையில் சீரமைக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: