அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது..!!

டெல்லி: அதானி விவகாரத்தால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்த நிலையில் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், 2 அவையும் முடங்கியது. அதானி பங்கு குறித்து ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின.

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை எனவும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.20,000 கோடி தொடர் பங்கு வெளியீட்டையும் நேற்று அதானி திரும்பப் பெற்றார்.

Related Stories: