மோடி, அண்ணாமலை, ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் படம் இல்லாமல் பேனர்; காலையில் உருவான கூட்டணி மாலையில் மறைந்தது: பாஜ மிரட்டலுக்கு பணிந்தாரா இபிஎஸ்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி போட்டியிடும் என்று கூறி பாஜவின் ஆதரவை கேட்டிருந்தனர். ஆனால் யாருக்கு ஆதரவு என கூறாமல் பாஜ காலம் கடத்தி வந்தது. இதனால் எரிச்சலடைந்தார் எடப்பாடி பழனிசாமி.ரோட்டில்  நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக்காக நேற்று முன்தினம் இரவு ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்பதற்கு பதிலாக ‘தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ எனவும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என இருந்தது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி  பழனிசாமி படங்கள் பெரிதாகவும், பிரதமர் மோடி படம் சிறிதாகவும் இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை அந்த பிளக்ஸ் அகற்றப்பட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல்  அலுவலகம் என மாற்றப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரில் கூட்டணி கட்சியினரான ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் படங்கள் மட்டுமே இருந்தன. பாஜவை சேர்ந்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, அண்ணாமலை மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன், புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம் ஆகியோரின் படங்கள் இடம் பெறவில்லை.

எடப்பாடி அணியின் செயல்பாடு குறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘எடப்பாடி அணிக்கு சரியான நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்றார். மாலையில் ஓபிஎஸ்சும் தனது அணி வேட்பாளரை அறிவித்தார். இதனால், யாருக்கு ஆதரவு தருவது? அல்லது பாஜ போட்டியிடுவதா? என்பது குறித்து டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து பேச அண்ணாமலை டெல்லி விரைந்தார். எடப்பாடி அணியின் சர்ச்சைக்குரிய பேனர் குறித்து, பாஜ தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று மாலை எடப்பாடி அணியினரின் பேனரில் ‘தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ என்று இருந்த இடத்தில் முற்போக்கு என்பதை மட்டும் ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருந்தனர். இதன் மூலம்  பாஜ  மிரட்டலுக்கு இபிஎஸ் பணிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜ இன்னும் அறிவிக்காததால், பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா, அண்ணாமலை,  படம் சேர்க்கப்படவில்லை. பாஜ ஆதரவு யாருக்கோ அவர்களுக்கே எங்கள் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளதால் அவர்களின் படமும் சேர்க்கப்படவில்லை.

* மீண்டும் பெரியார் படம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டெல்லி பாஜ தலைவர்களின் ஆலோசனையில்தான் அதிமுகவை ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வழிநடத்தி வருகின்றனர். பாஜவுடன் நெருக்கமாக   இருந்த  இந்த காலகட்டத்தில் பெரியார் படம் பெரும்பாலும் அதிமுகவினர்   பிளக்ஸ்  பேனர்களில் இடம் பெறாமல் இருந்தது. தற்போது, இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு, பெரியாரின் சொந்த ஊராகும். இங்கு, பெரியார் படத்தை தவிர்த்தால் பல விமர்சனங்களில் சிக்கி எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும் என்பதால், நேற்று வைக்கப்பட்ட   பிளக்ஸ் பேனரில்  தந்தை பெரியாரின் படம் பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: