போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரயில் மூலமாக வேலூர் சென்றார் முதல்வர்: பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க 2 நாள் அரசு பயணம்

சென்னை: பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க இரண்டு நாள் அரசு சுற்றுப்பயணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையிலிருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவரை அமைச்சர், மேயர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வழி அனுப்பி வைத்தனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் வேலூரில் மட்டும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் சுமார் ரூ.784 கோடி அளவில் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 மேலும், ‘தமிழ்நாட்டில் கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தையும் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் வகையில் இரண்டு நாள் அரசு சுற்றுப்பயணமாக வேலூர் மண்டலத்துக்கு சென்றார். இதற்காக நேற்று காலை 10.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டார்.  காலை 10.05 மணிக்கு ரயில் நிலையம் வந்த அவரை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அவர்களுக்கு கையை உயர்த்தி காட்டிய முதல்வர் ரயிலில் ஏறினார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் ரயிலில் பயணம் செய்தனர். நண்பகல் 12.30 மணிக்கு காட்பாடியை சென்றடைந்தார். காட்பாடி ரயில் நிலையத்தில் அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வேலூரிலேயே தங்கினார். அதன் பிறகு இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் அவர் 12 மணி வரை ஆய்வு மேற்கொள்கிறார்.

அந்த ஆய்வு முடிந்ததும் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்துக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து தன்பத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணம் முதலில் சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மக்கள் நலன் கருதி ரயில் பயணமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதிசெய்யும் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தினைச் செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன். தொடர்வண்டியிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து, பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: