ஒன்றிய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல் ஆக்கபூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்..!

சென்னை: மத்திய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல் ஆக்கபூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2023 - 24 ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்க ஏதுவாக ரூ.115 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறேன்.

ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியும், கால்நடைகள் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 10 ஆயிரம் கோடியும், விவசாய துறை மூலம் ரூ.20 லட்சம் கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்கிறேன். நாடு முழுவதும் குழந்தைகள், சிறார்கள், இளையோர் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்படும், பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தேமுதிக வரவேற்கிறது.

அதே சமயம் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே எல்லைகள் உள்ளதுபோல், கடலில் எல்லைகளை வரையறுத்து, எல்லை தாண்டுவதாக கூறி மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து, அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ஒதக்கப்பட்டுள்ள 10,000 கோடியில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை உலகத்தரம் வாய்ந்த சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடியில், விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.

பதப்படுத்தப்படும் அறைகளையும், தானியங்களை பாதுகாக்க குடோன்களை அமைக்க வேண்டும். மேலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இந்தியாவில் டாஸ்மாக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, தனிநபர் வருமானத்தை மேலும் உயர்த்துவது, ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஆண்டு வருமானத்தை உயர்த்துவது, நெசவு தொழிலுக்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு பட்ஜெட்டாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த வருடாந்திர பட்ஜெட், வெறும் சடங்காக இல்லாமல், அறிவிப்பு பட்ஜெட் ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: