ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்

திருமலை: ஆந்திர மாநில தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்தார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் மார்ச் 3,4ம் தேதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, நேற்று டெல்லியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில்  இருந்து தனி தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு என  தலைநகர் இல்லாமல் இருந்தது.

மாநில பிரிவினைக்கு பிறகு நடந்த தேர்தலில்  சந்திரபாபு முதல்வராக பதவியேற்ற பிறகு அனைத்து மாவட்ட மக்களுக்கு ஏற்ப  மத்தியில் இருக்கும் விதமாக குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள  சில கிராமங்களை இணைத்து அமராவதி தலைநகர் ஏற்பாடு செய்யப்படும் என  அறிவித்தார். அதற்கான பணிகள் நடைபெற்று 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும்  கையகப்படுத்தப்பட்டது. பிறகு நடந்த பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான  அரசு பதவியேற்றது. ஆந்திராவின் தலைநகராக அமராவதி செயல்படுத்தினால் மீண்டும்  மாநில பிரிவினைக்கான பிரச்னை ஏற்படும்.

எனவே ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட  ஆந்திர ஆகிய 3 தலைநகர் அமைப்பதாகவும், இதற்காக விசாகப்பட்டினத்தை நிர்வாக  தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற  தலைநகராகவும் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் 3 தலைநகர் மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதி தலைநகருக்காக  நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று  வருகிறது.

ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம்  விரைவில் செயல்பட தொடங்கும். அதன் பிறகு எனது முகாம் அலுவலகத்தை அங்கே மாற்றி சென்று விடுவேன். முதலீட்டாளர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு வந்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். ஆந்திராவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு அதிகளவில் தொழிற்சாலைகளை அமைக்க   முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Related Stories: