மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பிடித்த தாசில்தார் ஒப்படைத்த லாரியை விடுவித்து அனுப்பிய போலீசார்

*புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிர்ச்சி

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் கந்திலி அருகே மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தாசில்தார் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆனால், புகார் அளித்தும் லாரியை விடுவித்து நடவடிக்கை எடுக்காததால் தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மற்றும் நாட்றம்பள்ளி அருகே இரவு நேரங்களில் முரம்பு மண் கடத்துவதாக வந்த தகவலின்பேரில், நாட்றம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் புத்தாகரம்  அருகே டிப்பர் லாரி ஒன்று முரம்பு மண் ஏற்றிக்கொண்டு கந்திலி நோக்கி வந்தது.

உடனே அதிகாரிகள் டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்யதில், சுமார் 2 யூனிட் அளவு முரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து தாசில்தார் குமார் கந்திலி போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரியை கொண்டு செல் என லாரி டிரைவருக்கு உத்தரவிட்டார். அதன்படி லாரி டிரைவரும் ஸ்டேஷன் நோக்கி சென்றார்.இதற்கிடையே சாதுர்யமாக செயல்பட்ட  டிரைவர் லாரி ஓடிக்கொண்டு இருக்கும்போது ஹைட்ராலிக் மூலம் லாரியில் இருந்த முரம்பு மண்ணை கீழே கொட்டிக்கொண்டு சென்றார்.

பின்னர் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கிய போது டிப்பர் லாரியில் இருந்த மண் முழுவதும் கீழே கொட்டப்பட்டது.

இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் டிப்பர் லாரியை தாசில்தார் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் டிப்பர் லாரியில் மண் இல்லை என்பதால், எந்த ஒரு ஆதாரமின்றி வழக்கு பதிவு செய்ய முடியாது என கூறி டிப்பர் லாரியை விடுவித்தனர்.

இந்நிலையில் வருவாய் துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு முரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வருவதற்குள்ளாகவே லாரியில் இருந்த மண் கீழே கொட்டப்பட்டது. போலீசார் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் டிப்பர் லாரியை திருப்பி அனுப்பிய சம்பவம் வருவாய் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: