ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சயாத்திற்குள் வருகிறது மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் போராட்டம்

*அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ஆர்டிஓ, டிஎஸ்பி சமரசம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சாயத்திற்குள் வருகிறது. மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்டிஓ, டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த லாலாப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி, 3 தனியார் வங்கிகள், அஞ்சலகம், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் தரப்பில் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் லாலாப்பேட்டை  பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் கடையடைப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று 2வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், 100 நாள் வேலை திட்ட கூலி ஆட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை ஆர்டிஓ வினோத்குமார், வாலாஜா தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் லாலாப்பேட்டை பொதுமக்கள் கூறுகையில், லாலாப்பேட்டையில் உள்ள காஞ்சனகிரி கோயில் பல ஆண்டுகளாக  நாங்கள் தான் நிர்வாகம் செய்து வருகிறோம். தற்போது முகுந்தராயபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது காஞ்சனகிரி கோயில் என்று கூறி, இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் எனவும், முகுந்தராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் தண்ணீர், இடுகாடு, சுடுகாடு பயன்படுத்தக் கூடாது எனவும், 100 நாள் வேலை செய்ய கூடாது எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

தனியார் கம்பெனிகளில் முகுந்தராயபுரம், அக்ராவரம், மலைமேடு, நெல்லிகுப்பம் போன்ற கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை கொடுக்க வேண்டும். லாலாப்பேட்டை மக்களுக்கு வேலை வழங்க கூடாது எனவும் கூறுகின்றனர். அப்படி வேலை கொடுத்தாலும் ஒரு நபருக்கு தொழிலாளர் வரி என ₹200 பிடித்தம் செய்து கொள்கின்றனர். லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளை மனுவாக ஆர்டிஓவிடம் கொடுத்தனர்.

தொடர்ந்து பொதுமக்களிடம் ஆர்டிஓ  வினோத் குமார் பேசியதாவது: நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதிக்கூட்டம் நடத்தி ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும். மேலும், லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அதை அரசுக்கு பரிந்துரை செய்கிறேன், என்றார்.

அப்போது டிஎஸ்பி பிரபு கூறுகையில், இது தொடர்பான ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் இல்லை. நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து சமரசமாக செல்ல வேண்டும். மேலும் இதில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்ட - ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் அனுமதி வழங்கவில்லை. அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும், என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே முகுந்தராயபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் கூறுகையில், ‘காஞ்சனகிரி மலை கோயிலில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யவும் கோயிலில் புது நிர்வாகத்தை கூட்டி பணிகள் நிறைவேற்றுவதற்கான மனு கொடுக்க செல்கிறோம், என்றனர். அக்ராவரம், நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் மோட்டூர் மலைமேடு கிராம பொதுமக்களும் இதே கருத்தை தெரிவித்தனர். இதனாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: