மானாமதுரை அருகே குப்பைகளால் மாசுபடும் தீத்தான்குளம் கண்மாய்-தேசிய ஊரக வேலை திட்டத்தில் சீரமைக்க கோரிக்கை

மானாமதுரை : மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தீத்தான்குளம் கண்மாய்க்குள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் குளம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் மூலம் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் தீத்தான்குளம் கண்மாய், ஆலங்குளம் கண்மாய், கல்குறிச்சி கண்மாய் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

இந்த கண்மாய்களில் தீத்தான்குளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கண்மாயின் மேற்குபகுதியில் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் உள்ளது. கண்மாயினை ஒட்டிய இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களாக கண்மாயின் உள்வாய் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள், மரத்துண்டுகள், வீடுகளில் உபயோகப்படுத்திய உணவுபொட்டலங்களின் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கண்மாயின் உள்பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அருகிலுள்ள பள்ளியில் இருந்து மாணவர்களும் இந்த பகுதியில் வந்து இயற்கை உபாதைகளை கழிப்பது, விளையாடுவது என இருப்பதால் விஷப்பூச்சிகளால் மாணவர்கள் கடிபட வாய்ப்புள்ளது. மேலும் கண்மாயினுள் மழைக்காலங்களில் நீர்நிரம்பும்போது பிளாஸ்டிக் ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு மனிதர்கள், கால்நடைகளுக்கு சுவாசப்பிரச்சனை, புற்றுநோய் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே கண்மாயை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: