7 ஆண்டாக தேடப்பட்ட பிரபல ரவுடி சிக்கினார்

அண்ணாநகர்: ரவுடியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், 7 ஆண்டாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார்  கைது செய்தனர். சென்னை  அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் ரவுடி குமார் (44). இவர் கடந்த 2015 ஆண்டில் ரவுடி செல்வம் (50) என்பவரை வெட்டி கொலை செய்ய முயற்சித்தார். இதுதொடர்பாக, அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த குமார், வழக்கு சம்பந்தமாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், கடந்த 2016ல் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 7 ஆண்டாக தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ரவுடி குமார் தினமும் அவரது அம்மாவிடம் செல்போனில் பேசுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, குமார் அம்மாவின் செல்போன் நம்பரை வைத்து, செல்போன் டவர் மூலமாக கண்காணித்து வந்தனர். அப்போது குமார் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று, ரவுடி குமாரை சுற்றிவளைத்து  கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அண்ணாநகர் காவல் துணை ஆணையர் ரோகித்நாதன் கூறுகையில், ‘‘தலைமறைவு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு.

அண்ணாநகர் மாவட்ட சரகத்தில் உள்ள அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, திருமங்கலம், ஜே.ஜே.நகர், நொளம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பழைய மற்றும் புதிய ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ரவுடிகள் அட்டகாசம் தெரியவந்தால் பொதுமக்கள் தைரியமாக  அண்ணாநகர்  துணை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்கலாம். அதன்மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: