கோயம்பேடு மார்க்கெட்டில் திரியும் மாடுகளால் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறிகள், பழங்களை மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் கொட்டி வைக்கின்றனர். இவற்றை சாப்பிட கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட மாடுகள் மார்க்கெட் வளாகத்தில் வலம் வருகின்றன. அவ்வாறு வரும் மாடுகள், கடைகள் அமைந்துள்ள பகுதியில் நுழைந்து, ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு மிரண்டு ஓடுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும், கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், பூந்தமல்லி செல்லும் பிரதான சாலையில் தினமும் காலை முதல் மாலை வரை மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.  சில நேரங்களில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. எனவே, மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலை, கோயம்பேடு மார்க்கெட் வளாகம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு காய்கறிகள் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் உலா வருகின்றன. வியாபாரம் செய்யும் பகுதிகளில் அவை செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. திடீரென்று மாடுகள் சண்டை போட்டுக்கொண்டு ஓடுவதால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை நாசம் செய்துவிடுகிறது. மாடுகள் சாணம் அங்கங்கே போடுவதால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் கடந்து செல்லும்போது வழுக்கி விழுகின்றனர். எனவே, இந்த மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார். கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சமூகஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள நெற்குன்றம், சின்மயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமை, பசு மாடுகளை வளர்க்கின்றனர். மாட்டின் உரிமையாளர்கள் முறையாக வளர்க்காமல், சாலையில் சுற்றித்திரிய விடுகின்றனர். இதனால் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே மாடுகளை பிடிக்கவும், இவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: