கோயம்பேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்கு விசாரணை பாதிப்பு: போலீசார் திணறல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவதால் பணப் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும், வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது. பாதிக்கப்படும் நபர்கள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பது வழக்கம். இந்தநிலையில், கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால், குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் பதிவு செய்வதற்கும் போதிய இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் நிலுவையில் உள்ள வழக்குகளும் தற்போது புதிதாக உள்ள குற்றச் சம்பவங்களை விசாரிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே கோயம்பேடு காவல் நிலையத்திற்கு உடனடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இல்லாததால், சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அப்பணியை கூடுதலாக கவனித்து வருகிறார்.

அப்படியிருந்தும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க வந்தால் இன்ஸ்பெக்டர் இல்லாததால் சில வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே, குற்றப்பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டரை நியமித்தால் தான், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படும்,’’ என்றனர். போலீசார் இதுபற்றி கூறுகையில், ‘‘குற்றப்பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டர் வந்தபிறகு பழைய வழக்குகள் விசாரணை செய்யப்படும். எனவே தேங்கியுள்ள வழக்குகளை விசாரிக்கவும், புதிதாக கொடுக்க வரும் புகார்களை விசாரிக்கவும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை உடனடியாக நியமிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: