பாஜ கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜ கவுன்சிலராக இருப்பவர் தனபாலன். இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராகவும் உள்ளார். இவருடைய வார்டுக்கு உட்பட்ட பகுதியான வ.உ.சி. நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.

எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கவுன்சிலர் தனபாலனிடம் அதே பகுதியை சேர்ந்த சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர் முறையான பதிலளிக்கவில்லை. இதையடுத்து, கவுன்சிலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வார்டு பகுதியில் கோரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் நகர் பகுதியில் ஒட்டியுள்ளனர்.

இதையறிந்த கவுன்சிலர் தனபாலன், சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் போஸ்டர் ஒட்டும் இடத்துக்கு சென்று அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு போலீசில் சுதன் பிரபு புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் பாஜ கவுன்சிலர் தனபாலன் மற்றும் உடனிருந்தவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories: