ஆளே இல்லாத கடையில டீ ஆத்தும் செங்கோட்டையன்

ஈரோடு, அசோகபுரம் பகுதியில் தேர்தல் பணிக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை நிர்வாகிகள் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களது களப்பணி  வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. எனவே வெற்றி எனும் இலக்கை எளிதில் அடைவோம்.

இது அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வியக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கும். அது டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும். எங்கள் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்துக்கு பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அதிமுக, தமாகா கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர் இன்னும் வேகமாக இருக்கும். கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் எங்களிடம் இதை வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்’ என்று தெரிவித்தார். இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்று இதுவரை முடிவாகவில்லை. ஓபிஎஸ் அணியா? இபிஎஸ் அணியா? பாஜவா என்று அவர்களுக்குள்ளே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால், இரட்டை சிலை சின்னம் முடக்கப்படும்.

நிலைமை இப்படி உள்ள நிலையில் வேட்பாளர் யார், சின்னம் எது என ஒண்ணுமே தெரியாத நிலையில் செங்கோட்டையன் பிரசாரம் செய்து வருவதாக கூறுவது ஆளே இல்லாத கடையில யாருக்கு இவர் டீ ஆத்துறாரு என கட்சியினரே கிண்டல் செய்து வருகின்றனர்.

Related Stories: