விமான விவகாரத்தில் சாமானியர் மீது வழக்குப்பதிவு: அதிகாரத்தில் இருப்பவரின் குற்றத்தை மூடி மறைப்பது சமரசம் என்பதா?...அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்

சென்னை: விமானத்தின் அவசரக்கால கதவு திறந்த பயணி மீது இண்டிகோ நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த ஜனவரி 24ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் விமானம் சென்றுக்கொண்டிருந்தது. விமானம் வானில் இருந்து தரையிறங்க தயாராகியது. அப்போது, விமானத்தில் இருந்த பிரனவ் ராவத் என்ற பயணி அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த பயணி மீது புகார் அளிக்கப்பட்டு, விமான பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ஐ.பி.சி பிரிவு 336 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மும்பை விமான நிலைய காவல்துறையினரிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், விமானத்தின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என இண்டிகோ நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:  பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ள இண்டிகோ நிறுவனத்திற்கு நன்றி. ஆனால், குற்றவாளிகள் யாராக இருப்பினும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமானியர் மீது வழக்குப் பதிந்து அதிகாரத்தில் உள்ளவர்களின் குற்றத்தை நீங்கள் மூடி மறைப்பது சமரசம் தான்.இவ்வாறு அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, டிச.10ம் தேதி இண்டிகோ விமானத்தின் கதவை பாஜ எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

Related Stories: