தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.42,800 என மீண்டும் அதிகரித்துள்ளது. திருமணம் மற்ற சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ள பொதுமக்கள் தவிர்க்க முடியாமல் அதே விலைக்கு வாங்கிச் சென்றனர். தங்கம் விலை, கடந்த டிசம்பர் 31ம் தேதி சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. 28 மாதத்துக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து, ஜனவரி 14ம் தேதி சவரன் 42 ஆயிரத்தை கடந்தது. அன்றைய தினம் ரூ.42,368க்கு விற்கப்பட்டது. கடந்த 26ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் 43 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சவரன் ரூ.43,328க்கு விற்பனையானது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை 43 ஆயிரத்தை கடந்தது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு தங்கத்தின் தேவை, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பே காரணம் என்று கூறப்பட்டது. எனினும் பொதுமக்களின் நுகர்வும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும் பங்கு சந்தையில் பல நிறுவனங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்தன. இதனால், அவர்கள் வந்த விலைக்கு பங்குகளை விற்று, தங்கத்தில் முதலீடு செய்தனர். இப்படியே விலை உயர்ந்தால் இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை கிராம் ரூ.6000, சவரன் ரூ.48 ஆயிரத்தை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,350க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,800க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளைமார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: